Registration Form

FirstName: Email: Mobile:

Contact us: 9042091420 / 9944453333

ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதா


                                           ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு குறித்து முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட அவகாசம் கேட்டதால் காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடர்கிறது. 
செய் அல்லது செத்து மடி என்று ஆவேசமாக குறிப்பிட்ட ஹசாரே, 'எனது இந்த போராட்டத்திற்கு மக்கள் தந்துள்ள ஆதரவு மகிழ்ச்சி தருகிறது. இதுவரை எத்தனையோ ஊழல்கள் வெளிவந்துள்ளன; அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த போரட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு மிக முக்கியம். எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் ஊழல் செய்தால் அவர்களை எவ்வித முன் அனுமதி இன்றியும் விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் மசோதா ஒன்றே ஊழலை ஒழிக்க வழி' என்றார்.
இதற்கிடையில் ஹசாரேயின் ஆதரவாளர்கள் இந்தியா கேட் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதை போலீசார் தடுத்தனர். தடையை மீறி அவர்கள் ஊர்வலம் சென்றனர். ஊழலுக்கு எதிரான இவருடைய போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஊர்வலங்களும் உண்ணாவிரதமும் நடைபெறுகின்றன. 

ஊழலில் சிக்கியவர்கள் யாரும் தப்பி விடக்கூடாது , ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க உதவும் மசோதா உருவாகும் தருணத்திலேயே கடுமையாக இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையுடன் நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை துறக்க தயாராகி வரும் காந்திய சிந்தனைவாதி அன்னா ஹசாரேக்கு க்கு நாடு முழுவதும் பலத்தரப்பு மக்களும் தங்களுடைய ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளனர். 

3வது நாளாக இவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தைத் தொடர்ந்து ஊழல் ஒழிப்பு லோக்பால் மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்த மத்திய அரசு சம்மதித்துள்ளது.இத்துடன இவரது கோரிக்கை நியாயமானது என்றும் , மக்கள் பிரதிநித்துவம் கேட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர் கண்டிருக்கும் களம் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளன. அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் இவர் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இழுத்து சென்ற அரசியல்வாதிகள் பரிசுத்தமில்லாதவர்கள் என வர்ணிக்கிறார். 


இவரின் போராட்டம் ஏன் ? : பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில், மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரதிநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார்.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 3 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க டில்லி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளானவர்கள் இவரது மேடை அருகே கூடி வருகின்றனர். அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம் என்றும் அரசியல்வாதிகளை புறந்தள்ளி விட்டார்.

ராணுவ வீரராக இருந்தவர்: கிசான் பபத் பபாரோ ஹசாரே என்ற இயற்பெயர் கொண்ட மகாராஷ்ட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்திக் கிராமத்தை சேர்ந்தவர். இவரது வயது தற்போது 71. ஆரம் இளம்பிராயத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு டிரைவராக இருந்த போது எதிர்பாராத விபத்து காரணமாக ராணு பணியை விட்டு பொதுநலச்சேவையில் ஈடுபட்டார். நதிநீர் இணைப்பு, தகவல் உரிமை பெறும் சட்டம், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். உயரிய பத்மபூஷண் விருது பெற்றுள்ளார். 

அரசியல்வாதிகள் பின்னால் தமிழக மக்கள்: அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு தமிழகத்தில் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது வியப்பாக உள்ளது. ஊழலுக்கு எதிராக சரியான விழிப்புணர்வு, தமிழக மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை; ஊழலால் ஏற்படும் கடும் விளைவுகளை தமிழக மக்கள் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி அவர்கள் பின்னால் அலையும் தமிழக மக்கள், ஊழலுக்கு எதிரான இத்தகைய போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.

அடுக்கடுக்காக பிரமிக்க வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம். இப்பட்டிப்பட்ட செய்திகள் காந்தியவாதியான அன்னா ஹசாரேவின் கோபத்தை, ஆவேசத்தை நியாயப்படுத்தத்தான் செய்கிறது. காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழல் ஒழிப்பு மசோதாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார்.

அவருக்கு சாதாரண மக்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது . பொதுநலத்துக்காக போராடும் அன்னா ஹசாரேவுக்கும் நமது வாசகர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 
courtesy : தினமலர்